புற்றீசலாக ரக்கை கட்டி பறந்து கொண்டிருந்தனர் மக்கள் அனைவரும் அனைவரும் நேரத்துடன் போட்டாபோட்டி போட்டு
கொண்டு பிரபஞ்ச விதியை மீற முயற்சித்துகொண்டிருந்தனர். ரயில் நிலையம் முழுவதும்
மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. 'க்ரீச்' என்ற சத்தத்துடன் ரயில் நுழைந்தது தான் தாமதம் கூட்டிற்கு திரும்பிய
தாய் பறவையின் வாயை நோக்கி போட்டிபோடும் குஞ்சுகளை போல அனைவரும் ரயிலின்
நுழைவாயிலை நோக்கி முண்டியடித்து கொண்டு ஏறினர். உட்கார இடம் கிடைத்த
பெருமிதத்துடன் சிலர் பெருமூச்சு விட வடைபோச்சே என்ற ஏக்கத்துடன் வேடிக்கை பார்த்தனர்
மற்றவர்கள்.
அவர் அவர் வசதிக்கேற்ப அன்றைய செய்தித்தாள், வார பத்திரிகை, கைபேசி என
நேரத்தை விழுங்க முற்பட்டிருந்தனர். இதன் மத்தியில் இவர்களின் கவன சிதறலை
சில்லரையாக மாற்ற கரகரத்த குரலுடன் எம்.ஜி. ஆர் பாடல்கள், கண்ணு
தெரியாதவன்மா காலில்லமா என தனது இல்லாமையையும் இயலாமையையும் விற்றுகொண்டிருந்தனர். இரண்டு மூன்று நிறுத்தம் கடந்த ரயில் வண்டி அந்த நிறுத்தத்தில்
நின்றது. மக்கள் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தனர், ரயில்
நகரத்துவங்கியவுடன் அந்த
மூன்று பேர் அவசரமாக ஏறினர்.
'ஏ பார்த்துடி..' என்று ஒருத்தி மற்றவளை பார்த்து கூறினால்.
அவர்களின் சிரிப்பு சத்தம் அந்த பெட்டி
முழுவதும் கேட்டது.ரயிலில் பயணம் செய்தவர் அனைவரும் ஒரு நிமிடம் அவர்களை திரும்பி பார்த்தனர்.
மெல்லிய தேகம் பளிரென்ற உதடுச்சாயம் கைநிறைய
வளையல் இவையாவும் யாரையும் வசிகரித்ததாக தெரியவில்லை.
ரயிலில் பயணம் செய்தவர்களிடம் மூவரும்
கைகளை தட்டி
"ராஜா அக்காக்கு காசு
கொடுப்பா".
"அண்ணா காசுகொடுனே".
"அக்கா ஹெல்ப் பண்ணுங்கா"
என அனைவரிடமும் காசு கேட்டனர்.சிலர்
5ரூ-10ரூ என கொடுத்தனர், சிலர் அவர்களைப்பற்றி காது படவே கொச்சையாய் கிண்டல் செய்தனர்.எது
பற்றியும் கவலை படாமல் அனைவரிடமும் சிரித்துகொண்டே பணம் கேட்டனர்.அவர்களில்
ஒருத்தி கதவோரம் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனிடம்
"அண்ணா காசு கொடுணா"என்றால்,
தன் பர்சை எடுத்தவன் ஒரு முழு 100ரூ
நோட்டை அவளிடம் நீட்டினான், நூறு ருபாய் நோட்டை பார்த்தவுடன் மிக சந்தோஷத்தில் அவன் கன்னம்
கில்லி அவன் தலை கைவைத்து கடவுளின் பெயர்களை சொல்லி ஒருகுறையும் வராது என
வாழ்த்தினால்.அருகில் இருந்தவளிடம் நூறு ருபாய்
நோட்டை காட்டி அவனை காட்டி தம்பி கொடுத்தது என்றால் அடுத்த நிறுத்தம் வரவே அடுத்த
பேட்டியில் ஏற மூவரும் முற்பட்டனர் இறங்கும் போது அவன் கனத்தை கிள்ளிவிட்டு
சிரித்து கொண்டே இறங்கினர் அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு வேடிக்கை பார்க்க
ஆரம்பித்தான்.அனைவரும் அவனையே பார்த்து கொண்டிருந்தனர், சிலர் அருகில்
உள்ளவரிடம் எதோ கிசுகிசுத்தனர்.அவன் அருகில் இருந்த நடுவயது ஒருத்தர் அந்த '.......'களுக்கு எதுக்கு தம்பி 100 ரூ கொடுத்திங்க '.........'கழுதைங்க கொடுக்கறதை வாங்கிட்டு போவாதுங்க 10த கொடு 20த
கொடுனுவாளுங்க உங்களைமாதிரி சிலர் கொடுக்குறதாலதான் '......'லுங்க கொழுபெடுத்து அலைராளுங்க என்று அவனிடம் அ'ர'றிவுரை கூறினார்
பதிலுக்கு ஒரு புன்னகை மட்டும் சிந்திவிட்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி தன்
மணிபர்சை எடுத்து தானும் வீட்டை விட்டு ஓடிப்போன தன் தம்பியும் சிறுவயதில் எடுத்து
கொண்ட புகைபடத்தை ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே வைத்துகொண்டு நடக்க ஆரம்பித்தான்.
டிஸ்கி:
திருநங்கைகளை பற்றிய கதை என்பதால் தலைப்பிலேயே உங்களை அவர்களை பற்றிய ஒரு அசெளகரியத்துடன் அல்லது ஒரு பிம்பத்துடன் கதையை அணுக கூடாதென்பதற்காகவே இந்த தலைப்பு.
-அபி
தங்கள் கருத்துகள் அன்புடன் வரவேற்கபடுகின்றன.