மனம்
ஒரு பாத்திரத்தில் நிரப்பிய நீர் அது அந்த பாத்திரத்தின் வடிவைகொண்டது. ஆனந்த
கூச்சலும் ஆழ்ந்த சோகமும் அதே மனதின் வேறு வேறு வடிவங்கள். ஆசை அறிவின் சூழ்ச்சி
அது மனதிற்கு ஏவாளின் ஆப்பிலை போல ஆசையினை காட்டி இதை ருசித்து பார் என்று
எதையாவது உருட்டிவிட்டுகொண்டே இருக்கும்.மனதையும் அறிவையும் பிரிக்கும் ஒரே அம்சம்
மனசுக்கு மூளை எட்டுவதே இல்லை அதனால் ஆசையால் எதையும் ஞாபகம் வைத்து கொள்ள
முடியாது ஒருமுறை சூடுபட்டால் அறிவு ஒதுங்கி கொள்ளும் ஆனால் மனது மீண்டும் மீண்டும்
சூடுபட்டுகொண்டே இருக்கும்.
ஒருவர்
வளர வளர அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும்
ஆனால் மனசு அப்படி இல்லை வயதை பொருத்து அது மாறுவது இல்லை.அது இருக்கும்
பாத்திரத்தின் வடிவில் உள்ளதே தவிர மனது மனமாகவே இருக்கின்றது. இந்த உண்மை
புரியவைத்தது ஒரு சம்பவம். அன்று வழக்கமான ஒரு வேலை நாள் அலுவலம் முடித்து வழக்கம்
போல் வீடு திரும்பி கொண்டிருந்தேன். பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு
நடந்து வந்துகொண்டிருந்தேன் தெருவில் அதிகம் கூட்டம் இல்லை அங்கங்கே சிலர்
தென்பட்டனர் வழியில் ஒரு கடையின் அருகில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா
அவசர அவசரமாக ஒரு மாம்பழத்தை தின்று கொண்டிருந்தார் கையில் ஒரு பையில் ஐந்தாறு
மாம்பழங்கள் இருந்தன எங்கோ பரிட்சியமான முகம் யார் என்று ஞாபகம் வரவில்லை நான்
பார்ப்பதை அவர் கவனித்தவுடன் சட்டென பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன்.
இது
நடந்து ஒரு வாரம் இருக்கும் வீட்டில் அனைவரும் ஊருக்கு சென்றிருந்தனர் மதியம்
சாப்பிட்டு முடித்து என்ன செய்வது என்று யோசித்ததும் அருகில் உள்ள தோழியின் வீடு
ஞாபம் வரவே அவளை கைபேசியில் அழைத்தேன் வெளியில் சென்று உள்ளதாகவும் அரை
மணிநேரத்தில் திரும்பி விடுவதாகவும் வீட்டில் அம்மா உள்ளார் வேண்டும் என்றால் வீட்டில் சென்று காத்திருக்கவும் என்று சொன்னால்.
சரி என்று தோழியின் வீட்டில் சென்று காத்திருந்தேன் சிறிது நேரத்தில் கையில்
காபியுடன் வந்த அவளின் அம்மா வீட்டில் உள்ளவரின் நலன் குறித்து விசாரித்தார் தோழிக்கு வரன் பார்த்து
கொண்டிருப்பது முதல் ஊரில் போனமாதம் நடந்த தேரோட்டம் வரை அனைத்தையும் பற்றி
பேசிக்கொண்டு இருந்தோம். நடுவில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒரு அம்மாவும்
எங்களுடன் கலந்து கொண்டார் போன வாரம் பார்த்த அதே அம்மா தான்.பேசிகொண்டிருக்கும்
போதே நடுவில் கேட்கலாமா வேண்டாமா என மனதை அரித்த அந்த கேள்வியை கேட்டே
விட்டேன்.வீடு அருகிலேயே இருந்தும் ஏன் அன்று வழியில் நின்று கொண்டு மாம்பழங்களை
சாப்பிட்டு கொண்டிருந்தீர் என்று. அதற்கு அவர் சொன்ன பதில் மாம்பழம் சாப்பிடவேண்டும் என்ற ஆசை தான் என்று
சிறுபிள்ளையாய் பதில் சொன்னார்.
ஆனால் அந்த அந்த பதிலில் உள்ள வலியை பிறகு அவர்
சொன்ன போது தான் உணர முடிந்தது. தான் தன் மகன் மற்றும் மருமகளுடன் உள்ளதாகவும்
கணவர் இறந்து பத்து வருடம் மேல் அவுவதாகவும் சொன்னார். திருமணம் ஆன நாள் முதல்
அனைவரின் விருப்பு வெறுப்பு அறிந்து நடந்துள்ளதாகவும் தனக்கென தனிப்பட்ட எந்த ஒரு
விருப்பு வெறுபிற்கான வெளி அமையவில்லை என்றும் அதை குறித்து பெரிதாய்
அலட்டிகொள்ளாமல் கணவன் மற்றும் குழந்தையின் தேவையையே பெரிதாய் கொண்டு
வாழ்ந்துள்ளார். வாழ்வின் இன்பங்கள் எல்லாம் குழந்தையின் படிப்பு மற்றும்
முன்னேற்றம் என்று காலத்தை கடத்திவிட்டதாகவும் கூறினார். இன்று மகன் பெரிய நிறுவம்
ஒன்றில் பெரிய பதவியில் கை நிறைய சம்பாதிப்பதாகவும் மருமகளும் வேளைக்கு
செல்வதாகவும் சொன்னார். இன்று எல்லாம் இருந்தாலும் தன் சின்ன சின்ன ஆசைகள் கூட
வெளிபடுத்தவே அசிங்கமாக உள்ளதாக சொன்னார். அப்படி என்ன ஆசை என்று நான் கேட்டதற்கு.
வீட்டில் எதாவது சாப்பிட வங்கி வந்தால் “ம்ம்ம் அவங்களுக்கு இதலாம் பிடிக்காது
கொஞ்சமா கொடு” என்று விருப்பு வெறுப்பு கூட அவர்களே முடிவுசெய்து கொள்வதாகவும் தன்னிடம் கேட்பது கூட கிடையாது என்றும் கூறினார். நாம் எதாவது
கேட்டால் இவ்வளவு வயசாகியும் ஆச விடுதா பாரு என்று சொல்லுவார்களோ என்று ஒரு
கூச்சம். வீட்டில் தொலைகாட்சி பெட்டி முதல் சமையல் வரை சிறிய குழந்தை முதல் மகன்
வரை யார்வேண்டும் என்றாலும் தீர்மானிப்பர் ஆனால் நமது வயதை காட்டி நமக்கு அந்த
உரிமை கிடைக்காது. வயதானால் ரசனை ஆசை இல்லாத ஒரு துறவியாகவே நாம் பாவிக்க
படுகின்றோம். வாழ்வில் முதல் பாதி கணவர் வரும் வரை வீட்டில் உள்ளவர் நமது ஆசைகளை
நமக்காக அவர்கள் ஆசைபடுகிறார்கள்.கணவன் வந்த பிறகு (அதே தப்பை) நாம் அவர்களின்
ஆசையை அவர்களுக்காக நாம் ஆசைபட ஆசைபடுகிறோம்
கடைசியாக நாம் நமக்காக ஆசைபடும் போது மீண்டும் நமக்காக அவர்களே அசைபடுகிறார்கள்.
அவரவர் அவரவருக்காக ஆசை பட்டாலே போதும் ஆசை நிறைவேறுவதை காட்டிலும் அது சந்தோஷமான
ஒன்று என்றார். எத்தனை வலிகள் நிறைந்த வரிகள் இன்று இது நமது எல்லோர் வீட்டிலும்
நடப்பதுதான் ஆனால் அது நமக்கு வயதாகும் போது தான் தெரிகின்றது. என்றாவது நமது
அம்மா இன்று எனக்கு பிடித்த மோர்குழம்பு, உருளை வறுவல் என்று சமைத்ததுண்டா இல்லை,
நாம்தான் என்றாவது உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டதுண்டா உன் இஷ்டம் என்று
சொல்லுவோம் ஆனால் அது அவளுக்கு பிடித்த ஒன்றா என்றால் தெரியாது. discoveryயும்,
animalplanetஉம் நமது விரல் நுனியில் அவளுக்கு பிடித்த நாடகம் எப்போவதாவது அவள்
கெஞ்சும் நமது விளம்பர இடைவெளியில். வயோதிகம் அது உடலிற்கே தவிர மனதிற்கு அல்ல
நமது பாட்டியின் மனதில் இன்றும் பருவம் எய்தாத ஒரு பதின் பருவ குழந்தையின் மனது
இருக்கலாம் அவளின் ஆசையைத்தான் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்களேன் அந்த
குழந்தைக்கும் வரலாம் உங்கள் மீது ஒரு பருவ காதல்.